ஹங்கேரி: குரோஷியா நாட்டில் உள்ள லெக்ராட் நகரத்தில், தற்போது 2,250 பேர் மட்டுமே வசித்துவருகின்றனர். இங்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், மக்கள் தொகை தற்போது பாதியாகக் குறைந்துள்ளது.
பெரும்பாலானோர் வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இதனால், நகரமே வெறிச்சோடி, பல வீடுகளும் காலியாக உள்ளன. எனவே, லெக்ராட் நகரத்திற்கு மக்களைக் கவர்வதற்காக, நகர நிர்வாகம் புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது.
நகரில் காலியாக இருக்கும் 19 வீடுகளையும், கைவிடப்பட்ட கட்டுமான பணியிடங்களைக் கண்டறிந்து, அவற்றை ஒரு குனாவுக்கு விற்பனை செய்ய முடிவுசெய்துள்ளனர். ஒரு குனா என்றால் இந்திய மதிப்பில் சுமார் 12 ரூபாய் மட்டுமே.
மேலும், பழைய வீடுகளைச் சீரமைப்பதற்கு 25,000 குனா (3 லட்சம் ரூபாய்) வழங்குவதாகவும் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்ற ஆசையில் தவிக்கும் வாடகை வீட்டு மக்களுக்கு, நிச்சயம் இந்த அறிவிப்பு வரப்பிரசாதம்தான். நெட்டிசன்கள் பலரும், தெருவையே வாங்கிடுவோம் எடுடா வண்டிய என சமூக வலைதளத்தில் கலாய்த்துவருகின்றனர்.
நகர நிர்வாகம் அறிவித்திருந்த 12 ரூபாய் வீடு, பெரும்பாலும் விற்பனையாகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'எலிசபெத் ராணி மிகவும் கருணை மிக்கவர்...தாயாரின் ஞாபகம் வருகிறது' - ஜோ பைடன்