உலகெங்கும் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா மருந்து இதுவரை பயன்பாட்டிற்கு வராததால், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் கரோனா தொற்றுக்கு தடுப்புமருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கரோனாவுக்கு ஸ்புட்னிக் V என்ற தடுப்புமருந்தை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்தது.
முக்கியமான மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றாலும் இந்தத் தடுப்புமருந்து பாதுகாப்பானது என்பதால் மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்தது.
இருப்பினும், இந்த மருந்தின் பாதுகாப்புத்தன்மை குறித்து பல ஆராய்ச்சியாளர்களும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
ஸ்புட்னிக் V பாதுகாப்பானது என்பதை உலகிற்கு கூறும் வகையில் இந்த தடுப்புமருந்தின் முதல் இரண்டுகட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள், ’தி லான்செட்’ இதழில் (The Lancet journal) சமீபத்தில் வெளியிடப்பட்டது.
ஒருபுறம் தடுப்புமருந்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தாலும் மறுபுறம் மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைகளையும் ரஷ்யா தனது நாட்டில் தொடங்கியுள்ளது. ரஷ்யாவைத் தவிர சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பிலிப்பைன்ஸ், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் ஸ்புட்னிக் V தடுப்புமருந்தின் சோதனைகள் இம்மாத இறுதியில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்புட்னிக் V தடுப்புமருந்து அந்தந்த நாடுகளில் உற்பத்தி செய்துகொள்ள ஏதுவாக இந்திய அரசுடனும் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடனும் ரஷ்யா தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது.
முன்னதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் கிரில் டிமிட்ரிவ், "இந்தியா வரலாற்று ரீதியாக ரஷ்யாவில் மிக முக்கியமான கூட்டணி நாடாக இருந்து வருகிறது.
உலகில் உள்ள அனைத்து தடுப்புமருந்துகளிலும் சுமார் 60 விழுக்காடு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே இந்தியாவில் ஸ்புட்னிக் V தடுப்மருந்தின் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவது தொடர்பாக அரசுனுடம் நாட்டின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இதில் முன்னணி நிறுவனங்களுடன் சில ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளோம்" என்றார்
இதையும் படிங்க: மக்களின் பணத்தில் புதுப்பிக்கப்பட்ட வீடு: செலவை திரும்ப செலுத்திய இளவரசர் ஹாரி!