அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்னும் ஆப்பிரிக்க அமெரிக்கர், கடந்த மே 25ஆம் தேதி காவலர்களால் கொல்லப்பட்ட சம்பவம், அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பொதுமுடக்கத்தையும் பொருட்படுத்தாமல், இச்சம்பவத்திற்கு எதிராக அமெரிக்கா உள்பட உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
அந்த வகையில், லண்டனில் கடந்த சில தினங்களாகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மத்திய லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது.
லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் நுழைவுவாயிலைச் சுற்றி நூற்றுக்கணக்கானோர் திரண்டு, இனவெறிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (ஜூன் 07) போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் தொடர்ந்து மத்திய லண்டனை நோக்கிச் சென்றனர்.
தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அலுவலகத்திற்கு அருகே போராட்டம் நடைபெற்ற நிலையில், காவல் துறையினர் மீது போராட்டக்காரர்கள் பொருள்கள் வீசியதால் கைக்கலப்பு ஏற்பட்டது.
அந்நகரின் கிங் சார்லஸ் தெரு, செயின்ட் ஜேம்ஸ் பூங்காவை நோக்கி போராட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும்வகையில் காவல் துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் எதிரொலி: லண்டனில் மக்கள் போராட்டம்!