பிரிட்டன் நாட்டில் அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்திற்கு பின் எந்தவொரு டெலிகாம் ஆபரேட்டர்களும் ஹவாய் உபகரணங்களை நிறுவக் கூடாது என்று பிரிட்டனின் டிஜிட்டல் துறை செயலர் ஆலிவர் டோடன் தெரிவித்துள்ளதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹவாய் மீது தடை விதித்த பின்னர் ஜப்பானிய தொலைத் தொடர்பு நிறுவனமான என்.இ.சி உடன் 5ஜி நெட்வொர்க்குக்கான புதிய ஒப்பந்தத்தை பிரிட்டன் அரசு இன்று (நவ.30) அறிவித்தது.
இது குறித்து ஆலிவர் டோடன் மேலும் கூறுகையில், "நமது 5ஜி நெட்வொர்க்குகளிலிருந்து அதிக ஆபத்துள்ளவர்களை முழுமையாக அகற்ற தெளிவான பாதையை இன்று நான் அமைத்துள்ளேன். நமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தொலைத் தொடர்பு சாதனங்களை அடையாளம் கண்டு தடை செய்வதன் மூலம் இது சாத்தியப்படும்.
நமது நெட்வொர்க்குகள் ஒரு சில தொலைதொடர்பு நிறுவனங்களை மட்டும் சார்ந்திருக்க கூடாது என்பதை உறுதிப்படுத்த ஒரு புதிய மூலோபாய திட்டத்தை வெளியிடுகிறோம்" என்றார்.
பிரிட்டனின் 5ஜி நெட்வொர்க்குகளிலிருந்து அதிக ஆபத்துள்ள நிறுவனங்களின் கருவிகளை முழுமையாக அகற்றும் டவுனிங் ஸ்ட்ரீட்டின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது.
பிரிட்டன் அரசின் 5ஜி கொள்கையின்படி இந்தாண்டு இறுதிக்கு பின் ஹவாய் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்களை பிரிட்டனில் யாராலும் வாங்க முடியும். மேலும், 2027ஆம் ஆண்டிற்குள் பிரிட்டன் நாட்டிலுள்ள ஹவாய் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து சாதனங்களும் அகற்றப்படும்.
ஹாங்காங்கின் பிரச்னை காரணமாகவும் அமெரிக்காவின் தொடர் அழுத்தம் காரணமாகவும் ஜூலை மாதத்தில் ஹவாய் நிறுவனத்தின் சாதனங்களுக்கு தடை விதித்து பிரிட்டன் அரசு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா? - எச்சரிக்கும் தொற்றுநோய் வல்லுநர்