ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என, அந்நாட்டு மக்கள் 2016ஆம் ஆண்டு வாக்களித்தனர். அதன்பின், பிரிட்டன் வெளியேற்றத்தை (பிரெக்ஸிட்டை) சுமூகமானதாக்க, 2018 நவம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் - பிரிட்டன் இடையே 'பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம்' கையெழுத்தானது.
ஆனால், பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த பிரிட்டன் எம்பிகள், அதை மூன்று முறை நிராகரித்துவிட்டனர். இதனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காகப் பிரிட்டனுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு 2019 அக்டோபர் 31ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீது பிரிட்டன் எம்பிகளின் ஆதரவைப் பெறமுடியாததால், தெரசா மே கடந்த ஜூன் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பிரெக்ஸிட் பிரச்னையைத் தீர்த்து வைக்க கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த மாதம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பிரதமர் போரிஸ் தலைமையிலான அரசு, ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட் (No deal Brexit) நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், பிரெக்ஸிட் எனும் பிரிட்டன் வெளியேற்றம் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளதால் நேர விரயத்தைக் குறைக்க, அடுத்த மாதம் கூடவுள்ள பிரிட்டன் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒரு மாத காலம் முடக்கக்கோரி அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன், ராணி எலிசபெத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து பிரிட்டன் எம்பிகளுக்கு போரிஸ் ஜான்சன் எழுதிய கடிதத்தில், " தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சுமார் 340 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்..." எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தான் பிரிட்டன் ராணியிடம் பேசியுள்ளதாகவும், வரும் அக்டோபர் 14ஆம் தோதிலிருந்து புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
பிரிட்டன் பிரதமரின் இந்த திட்டம் அந்நாட்டு எம்பிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட்டை தடுக்கும் எம்பிகளின் முயற்சிக்கு முட்டுக்கட்டு போடவே பிரதமரின் திட்டம் உள்ளதாக , குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் மக்களவை சபாநாயகர் ஜான் பெர்கவ், இதனை அரசியல் சாசன மீறல் (Constitutional Outrage) எனவும் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், போரிஸ் ஜான்சனின் கோரிக்கை தற்போது எலிசபெத் ராணி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனால் டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு சரிவை கண்டுள்ளது. ஆகவே, பிரிட்டன் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.