கோவிட்-19 தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்றுக்கு சிகிச்சையளிக்க இதுவரை தடுப்புமருந்து கண்டுபிடிக்கப்படாததால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) என்ற மருத்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தத் தடுப்பு மருந்தின் முடிவுகள் இதுவரை சிறப்பாக உள்ளதால், விரைவில் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்தக் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட ஒருவர் திடீரென்று நரம்பியல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டார்.
இதனால் பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வந்த மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், இது குறித்து விசாரிக்க சுதந்திரமாக செயல்படும் விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், விசாரணைக்குழு தனது அறிக்கையை தற்போது சமர்பித்துள்ளது. அதில் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும், மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவரின் உடல்நிலை ஏன் பாதிக்கப்பட்டது என்பது குறித்து தற்போது எவ்வித தகவல்களையும் வெளியிட முடியாது என்றும் அறுவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழககத்தின் கரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் இன்று மீண்டும் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து பரிசோதனையின்போது உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவப் பரிசோதனைகள் நிறுத்தப்படுவது வழக்கமான நிகழ்வுதான் என்றபோதிலும், கரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனைகள் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை.
கோவிட்-19 தொற்று காரணமாக உலகெங்கும் இதுவரை இரண்டு கோடியே 89 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது லட்சத்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து சோதனை நிறுத்தும்: உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?