அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படுகொலைக்கு எதிராக நீதிகேட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் பெரும் போரட்டங்கள் அரங்கேறிவருகின்றன.
இதுபோன்ற ஒரு போராட்டம் நேற்று பிரிட்டன் நாட்டில் வன்முறையாக மாறிய சம்பவம் அங்கு சட்ட ஒழுங்கு பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தெற்கு லண்டன் பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணி நடத்தியபோது, சிலர் அங்கிருந்த முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிலையை சூறையாடத் தொடங்கினர். மேலும், கலவரச் செயலில் ஈடுபடத் தொடங்கிய போராட்டக்காரர்கள் சிலரைக் காவல் துறையினர் கட்டுப்படுத்த முயன்றனர்.
தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினரைப் போராட்டக்காரர்கள் தாக்கியதில் எட்டுக்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில், "மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியுடன் அமைதியுடன் போராடுவதற்கு அனைத்து உரிமையும் உண்டு. அதேவேளை இதில் ரவுடிகள் உள்ளே புகுந்து காலவர்களைத் தாக்கியது ஒருபோதும் ஏற்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க காவல் துறையினரை சட்டத்தின் முன்னிறுத்தும் புதிய சட்டம்!