ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் இந்தாண்டு மார்ச் மாதம் உச்சத்தைத் தொட்டிருந்தது. அதன்பின், அங்கு கரோனா பரவல் படிப்படியாக குறைந்தது. கரோனா பரவல் குறைந்ததை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை பிரான்ஸ் அறிவித்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பிரான்ஸில் தினசரி கரோனா உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை மீண்டும் 35 ஆயிரத்தைத் தாண்டியது. குறிப்பாக, கடந்த செவ்வாய்கிழமை மட்டும் பிரான்ஸில் சுமார் 520 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருவதால் பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதாக, அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று(அக்.30 - 00.00 மணி) நள்ளிரவு முதல் வரும் டிசம்பர் 1ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டிலுள்ள அனைத்து உணவகங்கள், பார்கள் மற்றும் அத்தியாவசியமற்ற அங்காடிகள் வரும் வெள்ளிக்கிழமை(அக்.30) முதல் மூடப்படும். மேலும், முடிந்தவரை மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இருப்பினும், தொழிற்சாலைகள், பண்ணைகள், கட்டுமான தளங்கள் தொடர்ந்து இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: ஹேக் செய்யப்பட்ட ட்ரம்பின் இணையதளம்!