மதங்கள் உள்ளிட்டவை சார்ந்த சர்ச்சைக்குரிய கேலிச் சித்தரங்களை வெளியிடுவதை பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியாகும் சார்லி ஹெப்டோ பத்திரிகை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக அப்பத்திரிகை உலக அளவில் பரவலாக அறியப்படும் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்நிலையில், நீண்ட நாள்களுக்கு பிறகு அந்த பத்திரிகை மீண்டும் ஒரு கேலிச்சித்திரத்தை அண்மையில் வெளியிட்டுள்ளது.
இதற்கு அனைத்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. மேலும் சார்லி ஹெப்டோ பத்திரிகை இத்தகைய செயல்களை நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் அதன் மீது மீண்டும் தாக்குடல் நடத்தப்படலாம் என அல்கொய்தா தீவிரவாத அமைப்பும் மிரட்டல் விடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அப்பத்திரிகை பணியாளர்கள் மீது நேற்று முன் தினம் (செப்.25) சில மத அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் தொடர்புடைய ஏழு பேரை பிரான்ஸ் காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
அதில் ஒருவர் பாகிஸ்தானில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2015ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்காக பாரீஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் தீவிரவாத அமைப்புகளின் தாக்குதலுக்கு உள்ளானது. அந்தத் தாக்குதல் சம்பவத்தில் அப்பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.