ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் மத்தியில் அமைந்துள்ளது நோட்ரே டேம் தேவாலயம். 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் பாரிஸ் நகரின் முக்கிய அடையாளமாகவும், பிரபல சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்த தேவாலயத்தில் கடந்த ஆண்டு இதே தேதி (ஏப்ரல் 16) பெரும் தீ விபத்து ஏற்பட்டு, தேவாலயத்தின் பிரதான மேற்கூரை தீக்கிரையாகி இடிந்து விழுந்தது. இந்த விபத்து பாரிஸ் நகரவாசிகள் மட்டுமல்லாமல், உலக மக்களிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தியது.
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தேவாலயத்தைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த சூழலில், பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாகக் கடந்த மாதம் (மார்ச்) 16ஆம் தேதி முதல் நிறுத்தி இப்பணிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
நோட்ரே டேம் அறக்கட்டளை மூலம் புனரமைப்புப் பணிக்காகத் திரட்டப்பட்ட 60.9 மில்லியன் டாலர் நிதியில் பெரும்பாலான பகுதி, ஏற்கெனவே பயணப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸின் சென்ட் சபையில் பேசிய புனரமைப்புப் பணிக்கான அந்நாட்டு அதிபரின் சிறப்புப் பிரதிநிதியும், ராணுவத் தளபதியுமான லூயிஸ் ஜார்ஜ்ஜெலின், நோட்ரே டேம் தேவாலயத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியுமா என்பது தற்போதைக்கு தெரியாது என்றும், தீ விபத்தால் ஏற்பட்ட முழு பாதிப்பையும் அறியப் பல நுண்ணிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாகவும் கூறியிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை புனித வெள்ளி சிறப்பு வழிபாட்டுக்காக நோட்ரே டேம் தேவாலயம் வந்திருந்த பேராயர் மைக்கேல் ஆவ்பெட்டீட், "ஓராண்டிற்கு முன்பு இந்த தேவாலயம் அழிவுக்குள்ளானது. இன்று (கோவிட்-19) பெருந்தொற்றால் நாடு பேரழிவுக்கு உள்ளாகி வருகிறது. ஆனால் எல்லாச் சூழலிலும் நம்பிக்கையும் இருக்கத்தான் செய்கிறது" எனக் கூறியிருந்தார்.
கோவிட்-19 வைரஸ் காரணமாக பிரான்ஸில், இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க மற்ற நாடுகளைப் போல், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உதவிகேட்ட பாகிஸ்தான்; கைகொடுத்த இந்தியா!