ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரோனாவால் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துள்ள நிலையில், அதன் தாக்கம் தற்போது இங்கிலாந்திலும் ஒலிக்கத் தொடக்கியுள்ளது.
இதுவரை அந்நாட்டில் 590 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அச்சுறுத்தும் தகவலைத் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் தற்போது பலி எண்ணிக்கை 10யை தாண்டியுள்ள நிலையில் கள நிலவரம் குறித்து போரிஸ் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போரிஸ் ஜான்சன், 'இங்கிலாந்து இதுவரை சந்தித்திராத அளவிற்கு மோசமான மருத்துவ அவசர நிலையைச் எதிர்கொண்டுள்ளது. இந்த நிலை மேலும் மோசமடையும். அரசின் யூகத்தின்படி இங்கிலாந்தில் மட்டும் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் பேர் கோவிட் - 19 வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே மக்கள் அனைவரும் உஷார் நிலையில் இருக்க அரசு அறிவுறுத்துகிறது.
பலர் தனது அன்பிற்குரிய குடும்ப உறுப்பினர்களை இழக்கும் அபாயம் எழுந்துள்ளது. இந்த அசாதாரண நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு அவசர கால நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. இது மோசமடைந்தால் அதைச் சமாளிக்கும் மருத்துவமணை வசதிகள் முழுமையாக இல்லாத சூழலில், அதைத் தடுக்கும் முயற்சியில் அரசு களமிறங்கியுள்ளது' என போரிஸ் அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்த நபருக்கு கொரோனா அறிகுறி!