சமீபத்தில் மாஸ்கோ மாகாண மருத்துவப் பல்கலைக்கழகம், ரஷ்யாவின் கமாலேயா தேசிய நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் இணைந்து கரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்திருந்தனர். அந்த மருந்திற்கு ஸ்புட்னிக் - வி (Sputnik V) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த தடுப்பூசி மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அனைத்து விதமான பரிசோதனைகள் முடிவதற்கு முன்பே, ரஷ்யா அறிவித்துவிட்டதாக பல சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், ரஷ்யாவின் அடுத்த தடுப்பூசி மருந்தின் ஆரம்ப கட்ட மனிதப் பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் வெக்டர் மாகாண வைரல் ஆராய்ச்சி மையமும் உயிரி தொழில் நுட்பவியல் மையமும் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்து எபிவாக்கரோனாவை ('EpiVacCorona') கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தின் அனைத்து விதமான பரிசோதனைகளும் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்தத் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்ட 57 தன்னார்வலர்களும் நலமுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.