ஜோர்ஜியாவில் சில அரசியல் கட்சி உறுப்பினர்கள், அக்டோபர் 31இல் வெளியான நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகம் வெளியே பேரணி ஒன்றையும் நடத்தினர். பேரணியின் போது மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் பதவி விலக வேண்டும் என்றும், உடனடியாக மறு தேர்தல் நடத்திட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மத்திய தேர்தல் ஆணையம் அலுவலகத்தை நோக்கி பயணித்த போராட்டக்காரர்கள், அலுவலக வாசலில் காவல் துறையினரால் தடுத்த நிறுத்தப்பட்டனர். அப்போது, சில காவல் துறையினரின் வாகனங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
எனவே, கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நீர் பீரங்கிகளை பயன்படுத்தியுள்ளனர். மேலும், இந்தப் பேரணியின் போது, 14 சட்ட அமலாக்க அலுவலர்கள், மூன்று ஊடக ஊழியர்கள் மற்றும் 10 போராட்டக்காரர்கள் என மொத்தமாக 27 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சட்டப்பூர்வ உத்தரவுகளை மீறி பொது சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக 19 பேரை காவல் துறையினர் கைதுசெய்து வைத்துள்ளனர். இந்தப் போராட்டம் காரணமாக ஜோர்ஜியா கலவர பூமி போல் காட்சியளிக்கிறது.