2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்.4ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று இலக்கியத்திற்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது. தான்சானியாவைச் சேர்ந்த அப்துல்ரசாக் குர்னா இந்தாண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறுகிறார்.
தற்போது இவர் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். காலனியாதிக்கத்தின் தாக்கம் வளைகுடா நாடுகளில் ஏற்படுத்திய பெரும் தாக்கங்கள், அதனால் அங்கு அகதிகளுக்கு ஏற்பட்ட சிக்கல் ஆகியவை குறித்த இவரின் எழுத்துக்காக இப்பரிசை பெறுகிறார்.
2020ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை அமெரிக்க பெண் கவிஞர் லுயிஸ் க்ளுக் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.
இதுவரை அறிவிக்கப்பட்ட விருதுகள்
2021 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜுலியஸ், ஆர்டம் பட்டாபோர்ஷின் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்கியூரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹசில்மேன் (ஜெர்மனி), ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகிய மூவருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.
பெஞ்சமின் லிஸ்ட் (ஜெர்மனி) மற்றும் டேவிட் மேக்மில்லன் (அமெரிக்கா) ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (அக். 08) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: 'நிஜ வாழ்விலும் தலைவி' தேர்தலில் களமிறங்குகிறாரா கங்கனா ரனாவத்?