1870 ஏப்ரல் 22ஆம் தேதி சிம்பிர்ஸ்கில், ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த லெனின், 1887ஆம் ஆண்டு தனது சகோதரரின் மரண தண்டனையைத் தொடர்ந்து புரட்சிகர சோசலிச அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் லெனின் தலைமையிலான மக்கள் படை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் வீதிகளை கைப்பற்றியது. மக்கள் படையுடன் ரஷ்ய இராணுவப் படைகள் இணைந்தபோது ரஷ்யாவின் இரண்டாம் ஜார் நிக்கோலஸ் பதவி விலகவேண்டியதாயிற்று. இதன்பின்பு அங்கு ஒரு தற்காலிக ஆட்சி ஏற்பட்டது.
ஜூலியன் நாட்காட்டியின்படி, 1917ஆம் ஆண்டு பிப்ரவரி பிற்பகுதியில் தொடங்கிய புரட்சி, பிப்ரவரி புரட்சி என்று அறியப்படுகிறது. ஆனால், இது ரஷ்யப்புரட்சியின் ஆரம்பம் மட்டுமே. லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள், சுவிட்சர்லாந்திலிருந்து ரஷ்யாவுக்கு திரும்பி அலெக்சாண்டர் கெரென்ஸ்கியின் தற்காலிக அரசாங்கத்தை கவிழ்த்த புரட்சியே ரஷ்யப் புரட்சி அல்லது நவம்பர் புரட்சி என்று அழைக்கப்படுகிறது.
நவம்பர் புரட்சி ரஷ்யாவின் அரசியல் அமைப்பின் மாற்றத்திற்கும், சோவியத் ஒன்றியத்தின் உருவாக்கத்திற்கும் வழிவகுத்தது. 1917ஆம் ஆண்டு நவம்பர் புரட்சியை நடத்திய போல்ஷ்விக்குகள், ஒரு கம்யூனிஸ்ட் அரசை உருவாக்குவதில் வெற்றிபெற்றனர். அவர்கள் அமைத்த சோவியத் யூனியன் 1991ஆம் ஆண்டு வரை வெற்றியும் கண்டது.
சோவியத் ஆட்சியின் மரபு, லெனினின் உண்மை நோக்கங்களை மீறியுள்ளது என்று ரஷ்ய வரலாற்று நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கான்ஸ்டான்டின் மொரோசோவ் கூறுகிறார்.
மேலும், "லெனின் இரண்டு வழிகளில் அறியப்படுகிறார். ஒன்று ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியை ஒழித்த புரட்சியாளராகப் பார்க்கப்படுகிறார். மறுபுறம், தனிநபர் உரிமைகள் மற்றும் அரசியல் சுதந்திரங்களை மறுத்து நசுக்கிய சர்வாதிகார ஆட்சிக்கு அடித்தளமிட்டவராக அறியப்படுகிறார். அவருடைய கொள்கைகள் அனைத்தும் நன்றாகவே இருந்தன. ஆனால், அதற்கு ஏற்ற செயல்பாடுகள் இல்லை" என்று அவர் கூறுகிறார்.
லெனின் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, ஜோசப் ஸ்டாலினை விமர்சித்தும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் எனவும் ஒரு அறிக்கை எழுதினார். ஆனால், லெனினின் மரணத்திற்குப் பின்பு அந்த ஆவணம் மறைக்கப்பட்டது. அதன்பின்பு, அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாடு ஸ்டாலின் கைகளில் வந்தது.
"லெனினின் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை ஸ்டாலினின் வளர்ச்சி மறைத்துவிட்டது. ரஷ்ய வரலாற்றில் லெனினுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. ரஷ்யாவின் வரலாற்றில் லெனின் ஒரு அபாயகரமான பாத்திரத்தை வகிக்கிறார். இன்று அவரது முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது" என லெனின் வரலாற்றுப் பாத்திரத்தை மொரோசோவ் விவரிக்கிறார்.
"தன்னை புரட்சியாளராக கருதிய லெனின், சோதனை முயற்சியாக ஒரு சோசலிச சமூகத்தை அமைக்க விரும்பினர். மாறாக, அவர் தனிநபர் உரிமைகளை மறுக்கிற, அரசியல் சுதந்திரத்தை மறுக்கிற ஒரு சர்வாதிகார ஆட்சியையே உருவாக்கினார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 1924 ஜனவரி 21ஆம் தேதி உயிரிழந்த லெனினின் மரபு நவீன ரஷ்யாவிலும் தொடர்கிறது” என மொரோசோவ் கூறுகிறார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து - இங்கிலாந்து நாளை முதல் மனிதர்கள் மீது சோதனை!