உக்ரைன் மீது ரஷ்யா பிப். 24ஆம் தேதி போரை தொடங்கியது. தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், 9ஆவது நாளான இன்றும் (மார்ச் 4) உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவின் தேசியப் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர், மிஹைல் மிஸின்ட்செவ், இன்று (மார்ச் 4) தெரிவிக்கையில்,"உக்ரைனின் பெல்கோரோட் பகுதியின் நெகோடெவ்கா மற்றும் சுட்ஜா ஆகிய சோதனைச்சாவடிகளில் இன்று காலை 6 மணியிலிருந்து 130 பேருந்துகள் இந்திய மாணவர்களை மீட்கத் தயார் நிலையில் உள்ளன.
தொடரும் வெளியேற்றப்பணி
உக்ரைன் கார்கீவ், சுமி ஆகிய நகரங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்டு மேற்கு எல்லை வழியாக வெளியேற்றும் பணி நடைபெற்றுவருகிறது. சுமி நகரில் மட்டும் 700 இந்தியர்கள் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோரை இந்தியத் தூதரக அலுவலர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
நேற்று இரவு (மார்ச் 3) முதல் இன்று காலை வரை, 600 மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தூதரக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்த இரண்டு நாள்களில் சுமார் 7 ஆயிரத்து 400 மாணவர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3000 மாணவர்களின் நிலை என்ன?
மீட்புப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பல இந்திய மாணவர்கள் மீது ரஷ்யா மற்றும் உக்ரைன் வீரர்களால் மட்டுமல்லாமல் போலந்து, ருமேனியா எல்லைகளிலும் தாக்குதலுக்குள்ளாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்திய மாணவர்கள் யாரும் பிணையக்கைதிகளாக இல்லை என இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அரிந்தரம் பக்ஷி தெரிவித்தார். இதையடுத்து, சில மணிநேரங்களில் ரஷ்ய அதிபர் புடின், உக்ரைனியப் படையினர் கார்கீவ் ரயில் நிலையத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்களை அடைத்துள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உக்ரைன் அணுமின் நிலையம் மீது தாக்குதல்... ஜோ பைடன் கவலை...