மூங்கில் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா முதல் இடத்தில் உள்ளது. சீனாவைக் காட்டிலும் இந்தியாவில் மூங்கில் பயன்பாடுகள் குறைவாகவே இருக்கிறது. இந்தியாவில் இன்னும் சில இடங்களில் முறம், குடை, கீத்து உள்ளிட்டவைக்கே மூங்கில் பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் நாற்காலி, ஷோபா, கதவு, ஜன்னல் உள்ளிட்டவையை மூங்கில் மூலம் தயாரித்து வருமானத்தை ஈட்டுகின்றனர். இந்தியாவில் பெம்பாலான இடங்களில் மூங்கில் குறித்து விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.
ஆண்டுதோறும் செப்டம்பர் 18ஆம் தேதி உலக மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது. மற்ற மரத்தை விடவும் இந்த மரத்தின் நன்மைகளுக்காகவும் பயன்களுக்காவும், அதனை அனைவரும் வளர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த தினம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம், வனத்தின் வாழ்வாதாரம் ஆகிய தனிச் சிறப்புமிக்க பெயர்களைக் கொண்டது மூங்கில். ஏன் மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் விஷேசமானது. மூங்கில் மரம் மற்ற மரத்தைக் காட்டிலும் கார்பன் டைஆக்ஸைடை அதிகளவில் எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். ஆக்ஸிஜன் அதிகளவு வெளியிடுவதால் மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கிறது.
மூங்கிலின் முக்கியத்துவம், ஏன் அதனை வளர்க்க வேண்டும்?
மூங்கில் குளிர்ச்சி நிறைந்த மரம், அதனை வளர்ப்பதால் சுற்றுப்புறம் முழுவதும் குளிர்ச்சி நிறைந்தே இருக்கும். கோடை காலங்களில் மூங்கில் வீட்டைச் சுற்றி இருந்தால் குளிர்ச்சி தரக்கூடியதாக இருக்கும் என்பது அதன் இயல்பு. மூங்கிலினால் செய்யப்படும் நாற்காலியை பயன்படுத்தினால் உடல் சூட்டை அது தணித்துவிடும். எவ்வளவு நேரம் அதில் அமர்ந்திருந்தாலும் உடலுக்குச் சூட்டை ஏற்படுத்தாது.
தற்போது பல அலுவலகங்களில் பயன்படுத்தும் குஷன் சேரைக் காட்டிலும் பன்மடங்கு நன்மை தரக்கூடியது மூங்கிலால் ஆன நாற்காலிகள்.
மூங்கில் விதையின் மூலம் கிடைக்கக்கூடிய மூங்கில் அரிசியில் ஊட்டச்சத்து அதிகமுள்ளது. பெரும்பாலும் இந்த அரிசியை பழங்குடியினரே அதிகம் உட்கொள்வர். ஆனால் தற்போது பல கடைகளில் மூங்கில் அரிசி கிடைப்பதால் பலரும் அதனை விரும்பி சாப்பிடுகின்றனர். நீரிழிவு, ரத்த அழுத்த நோய் உள்ளவர்களை மூங்கில் அரிசியை உண்ணுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த அரிசி 60 வயதான மரத்தில் இருந்து மட்டுமே கிடைக்கும். மரம் நட்டு 60 ஆண்டுக்குப் பிறகு விதை வைக்கும். அந்த விதைகள் மூலமே அரிசி கிடைக்கிறது. இந்த அரிசி நெல் பயிரை போலவே இருக்கும், சாப்பிடுவதற்கு நெல் அரிசியை விட ருசியாக இருப்பதாகவும் தெரியவருகிறது.
மூங்கில் மரத்திற்கு தண்ணீர் விட வேண்டிய அவசியமில்லை. கோடை காலத்தில் தானாகவே வளர்ந்துவிடும். மழை காலங்களில் மழை பெய்யாவிட்டால் மட்டுமே மூங்கிலுக்கு தண்ணீர் தேவைப்படும். ஒரு மரம் வளர மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். அதன் பிறகு மூங்கில் வருமானத்தை ஈட்டித் தரும். இந்த மரம் ஒன்றோடு ஒன்றோடு சேர்ந்து புதர் போலவே வளரும். மூங்கில் மரத்தின் ஆயுட்காலம் 60 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை வாழும்.
மூங்கில் மரத்தின் இலைகள் ஆடு, மாடுகளுக்கு உணவாகும். மரத்தில் இருந்து கீழே விழும் இலைகள் பூமிக்கு உரமாகிறது. மூங்கில் மரக்கூழ், பேப்பர் தயாரிக்க உதவுகிறது. மூங்கிலில் உள்ள வேர்ப் பகுதியில் கிடைக்கும் கிழங்கு காட்டுப் பன்றிகளுக்கு உணவாகிறது. பிளாஸ்டிக் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் மூங்கில் பயன்படுத்தலாம். இரும்புக்குப் பதிலாக மூங்கிலிலேயே உபயோகப்படுத்தலாம். இரும்பை விட பலமுடையது எவ்வளவு வளைத்தாலும் வளையாது, முறியாது. வீடுகளை மூங்கில் மரத்தில் கட்டினால் பலமாகவும், உடலுக்கு நன்மை பயக்கும் விதமாகவும் இருக்கும்.
மூங்கில் எக்காரணத்திலும் வளையாது, முறியாது என்பதாலே சீனாவில் பல வீடுகள் மூங்கில் மரத்திலேயே கட்டியுள்ளனர்.
மூங்கிலினால் நன்மைகளே உள்ளது. மூங்கிலினால் ஏற்படும் நன்மைகள் வனத்தை வளமாக்கும், அதனை வைத்து வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும். மூங்கிலினால் கிடைக்கும் எந்தப் பொருட்களும் தீங்கானவையோ, சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவையோ அல்ல. ஆகவே வீடுகள் தோறும் நாம் பச்சைத் தங்கத்தை வளர்க்கலாம்..!
இதையும் படிங்க:
#EngineersDay... எதுக்குனு சேர்ந்தவங்களுக்கும் தெரியல; சேர்த்தவங்களுக்கும் தெரியல...