கரோனா வைரஸ் நோயின் பிறப்பிடம் குறித்து வூகான் நகரில் ஆராய சென்ற உலக சுகாதார அமைப்பின் குழுவுக்கு விசா பிரச்சினையைக் காரணம்காட்டி சீனா அனுமதி மறுத்துள்ளது. இரண்டு பேர் கொண்ட குழு சென்றதாகவும், அவர்களின் விசாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறி நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதில், ஒருவர் திரும்பி வந்துவிட்டதாகவும், மற்றொருவர் வேறொரு நாட்டில் இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கவதற்காக நீண்ட மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், சீனா டிசம்பர் மாதம் அனுமதி வழங்கியது.
அனுமதி மறுக்கப்பட்டது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், "இரண்டு பேர் கொண்ட குழு ஏற்கனவே தங்களின் பயணத்தை தொடங்கிவிட்டனர். கடைசி நேரத்தில், குழுவில் இருக்கும் மற்றவர்கள் பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.
விசா பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாக சீனா உத்தரவாதம் அளித்துள்ளது. வைரஸ் பிறப்பிடம் குறித்த ஆராய்ச்சி உலக சுகாதார அமைப்புக்கும் சர்வதேச குழுவுக்கும் மிக முக்கியமான ஒன்று என்பதை சீனாவின் உயர்மட்ட அலுவலர்களுக்குத் தெரிவித்துவிட்டேன்" என்றார்.
வைரஸ் நோய் எப்படி மனிதர்களிடம் பரவியது என்பது குறித்து ஆராய 10 பேர் கொண்ட சர்வதேச வல்லுநர்களை சீனாவுக்கு அனுப்பு உலக சுகாதார அமைப்பு பல மாதங்களாக முயற்சி மேற்கொண்டுவருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில், கரோனா வைரஸ் நோய் முதன்முதலாக வூகானில் கண்டறியப்பட்டது.