இந்தியா-சீனா எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவருகிறது.
இந்நிலையில், பிரச்னையைத் தீர்க்க இந்தியாவை சீனா பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வான் பள்ளாத்தாக்கு சீனாவுக்குள்பட்ட பகுதி.
அலுவலர்கள் அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட ஒருமித்த கருத்தையும் விதிமுறைகளையும் மீறி இந்தியர்கள் அத்துமீறி நடந்துகொண்டுள்ளனர். ராணுவ வீரர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத்தந்து ஊடுருவலை நிறுத்த இந்தியாவைக் கேட்டுக் கொள்கிறோம்.
சீனாவுடன் செயல்பட்டு பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள அழைப்புவிடுக்கிறோம்.
ராணுவ ரீதியாகவும் ராஜாங்க ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. எது சரி எது தவறு என்பது தெளிவாக உள்ளது. எல்லைமீறல் சீனாவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நடைபெற்றுள்ளது. எனவே, சீனாவை இதில் குறை கூறக்கூடாது. மோதல்களை நாங்கள் விரும்பவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.