ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நிலவிவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக கத்தார் தலைநகர் தோஹாவில் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா கடந்த 10 மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திவந்தது. ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக தலிபான்களுடன், அமெரிக்கா அமைதி ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
இது குறித்து ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸால்மே கலிஸாத், "தலிபான்களுடன் நாங்கள் அமைதி ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளோம். இதனை ஏற்பது குறித்து அமெரிக்க அதிபர் முடிவெடுப்பார். இந்த ஒப்பந்தத்தின் அனைத்து நிபந்தனைகளையும் தலிபான்கள் நிறைவேற்றினால் ஐந்து ராணுவ தளங்களில் முகாமிட்டுள்ள 5 ஆயிரம் வீரர்கள் 135 நாட்களுக்குள் நாடு திரும்புவர்" எனக் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் தற்போது 14 ஆயிரம் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் முகாமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.