கரோனா வைரஸால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மாணவர்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் முறையில் கல்விப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சூழலில் ஆய்வு மேற்கொண்ட யுனிசெஃப் (United Nations International Children's Emergency Fund (UNICEF)), "உலகளவில் 120 கோடி குழந்தைகள் பள்ளிக்கு வெளியே உள்ளனர். அவர்கள் தொழில் நுட்பத்தை கையாள்வதில் சிரமம் உள்ள காரணத்தினால், உலகளவில் கல்வி கற்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுனிசெஃப் கல்வித் தலைவர் ராபர்ட் ஜென்கின்ஸ் கூறுகையில், '' ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பலவிதமான கற்றல் கருவிகளை வழங்குவதும், இணையத்தை அணுகுவதும் மிகவும் சிக்கலானது. பல நாடுகளில் மின்சாரத் தட்டுப்பாடு உள்ளதும்; மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. கரோனா தொற்று வருவதற்கு முன்பே, ஒரு கற்றல் நெருக்கடி மறைமுகமாக நிலவியது. ஆனால், தற்போது உலகத்தில் கல்வி நெருக்கடி அதிகமாக வாய்ப்புள்ளது' எனத் தெரிவித்தார்.