ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்ட நாளிலிருந்து, காஷ்மீரில் சில பிரிவினர் போராட்டம், பேரணி, கல்வீச்சு என ஆங்காங்கே அரங்கேற்றிவருகின்றனர். அம்மாநிலத்தில் தொலைத்தொடர்பு சேவை முடக்கப்பட்டு பெருவாரியான மக்கள் சிரமப்பட்டுவருவதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு என்னதான் காஷ்மீர் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்கள் என்று கூறிவந்தாலும் இன்னும் பெருவாரியான இடங்களில் அது சாத்தியமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனை உணர்த்தும் வகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த கல்வி செயற்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா காஷ்மீர் பிரச்னை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து சரமாரியாக ட்வீட்களை பதிவிட்டுவருகிறார்.
அதில், "கடந்த 40 நாட்களாக உலக தொடர்பு துண்டிக்கப்பட்டு காஷ்மீரில் மக்கள் வாழ்ந்துவருவதால் அவர்கள் குரல் அனைவரையும் சென்றடையவில்லை. குறிப்பாக காஷ்மீர் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லமுடியாமல் தவித்துவருவதால் ஐ.நா. மனித உரிமை ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு இப்பிரச்னையில் தீர்வு காண வேண்டும்" என்றார். குறிப்பாக காஷ்மீர் மாணவியர் பள்ளிக்குச் செல்வதை அங்கிருந்து அவர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் ட்வீட் செய்திருந்தார்.