ஜெனீவா(சுவிட்சர்லாந்து): மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அவசர நிலை நீடித்து வருகிறது. இதையடுத்து அரசின் அதிகாரங்கள் அனைத்தையும் அந்நாட்டின் ராணுவத்துறை தளபதி மின் ஆங் ஹிலாங் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று(ஜுன் 11) பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக, 638 குடிமக்களை மியான்மர் அரசு கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
மியான்மரில் வன்முறை அதிகரித்துவருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழக ஆணையர் மிச்செல்லே பேச்லெட் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வன்முறையால் மியான்மரின் கிழக்கு கயா மாநிலத்தில் கடந்த மூன்று வாரங்களில் 1 லட்சத்து 8 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் வீடுகளிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மக்கள் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதிற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ராணுவம் மக்களைப் பாதுகாக்க வேண்டும்
'மியான்மரின் ராணுவத்திற்கு பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் பொருட்களுக்கு எதிராக கனரக பீரங்கிகளை மூர்க்கத்தனமாக பயன்படுத்துவதை மியான்மர் பாதுகாப்புப்படை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்' என்று மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையர் மிச்செல்லே பேச்லெட் கூறினார்.
பிப்ரவரியில் ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றிய மியான்மர் ராணுவம், ஆரம்பத்தில் வன்முறையற்ற போராட்டங்களால் அதன் ஆட்சிக்குப் பரவலான எதிர்ப்பை எதிர்கொண்டது.
உருவாகிய ஆயுதக் கிளர்ச்சி
அமைதியான ஆர்ப்பாட்டங்களை நசுக்க காவல்துறையினரும் ராணுவத்தினரும் முயன்ற பின்னர், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ஒரு குறைந்த அளவிலான ஆயுதக் கிளர்ச்சி உருவாகியுள்ளது.
பிப்ரவரி 1 முதல் குறைந்தது 860 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் போராட்டங்களின் போது, ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆட்சிக்குழுவின் எதிர்ப்பாளர்கள் உட்பட 4,800க்கும் மேற்பட்டவர்கள் தடுப்புக்காவலில் உள்ளனர் என்ற நம்பகமான அறிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் கழகம் மேற்கோள் காட்டியுள்ளது.
"நான்கு மாதங்களுக்குள், மியான்மர் ஒரு பலவீனமான ஜனநாயகமாக இருந்து மனித உரிமை பேரழிவிற்கு சென்றுவிட்டது. இந்த நெருக்கடிக்கு ராணுவத் தலைமை மட்டுமே பொறுப்பு, அது கணக்கில் வைக்கப்பட வேண்டும்" என்று மிச்செல்லே கூறினார்.
ஜுலை மாதம் அதன் அடுத்த அமர்வின் போது ஐ.நா.வின் உயர் மட்ட மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கழகத்தை புதுப்பிக்க மிச்செல்லேவின் அலுவலகம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்: பிஞ்சுகளைக் கிள்ளி எறியாதீர்!