பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் கல்வி ஆர்வலர் மலாலா யுசஃப்ஸாய். தன் சிறுவது முதலே பெண்கள் கல்வி குறித்து குரல் எழுப்பிவரும் இவரை, 2012ஆம் ஆண்டு தலிபான் பயங்கரவாதிகள் தலையில் சுட்டுக் கொல்ல முயன்றனர். நல்வாய்ப்பாக அவர் பிழைக்கொண்டார். இந்தச் சம்பவத்துக்குப் பின்பு, மலாலாவின் பெயர் உலக அரங்கில் ஒலிக்கத் தொடங்கியது, 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் அவரைத் தேடி வந்தது.
உலகளவில் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிவரும் மாலாலா, 2010-20 தசாப்தத்தின் மிகவும் பிரபலமான பதின்ம வயதுப் பெண் என ஐநா தற்போது அறிவித்துள்ளது.
2010-20 தசாப்தத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்து 'Decade in Review' என்ற அறிக்கை தயார் செய்துள்ள ஐநா, 2012ஆம் ஆண்டில் சிறுமிகளின் கல்விக்காக மலாலா மேற்கொண்ட முன்னெடுப்பையும் குறிப்பிட்டுள்ளது.
"மலாலாவைத் தலிபான்கள் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் உலகளவில் பெரும் கண்டன அதிர்வலைகளை எழுப்பியது. மலாலாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சம்பவம் நடந்த அதே ஆண்டின் மனித உரிமைகள் தினத்தன்று பாரிசில் அமைந்துள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் சிறுமிகள் பள்ளிக்கு செல்வது, அவர்களின் கவ்வித்திறனை மேம்படுத்தவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தலிபான்கள் கொலை முயற்சிக்கு பின்னரே மலாலா மேலும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார். அவர் மீதான மதிப்பும் மேன்மேலும் வளரத்தொடங்கியது. 2017ஆம் ஆண்டு ஐநா-வின் அமைதிக்கான தூதராக அவர் நியமிக்கப்பட்டார்" என ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
22 வயதாகும் மலாலா சமீபத்தில், 'டீன் வோக்ஸ்' மாத இதழின் முதல்பக்கத்தில் இடம்பெற்றிருந்தார்.
இதையும் படிங்க : தேர்தல் விளம்பரங்கள்: முன்னாள் மேயரின் செலவு 120 மில்லியன் டாலர்...