ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் செயல்பட்டுவரும் மகப்பேறு மருத்துவமனையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், செவிலியர் என 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது.
இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மருத்துவமனைகள், மருத்துவப் பணியாளர்களுக்கு சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பொறுப்பேற்க வேண்டும்.
முன்னதாக பால்க், கோஸ்ட், நங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து, ஐநா சபை கவலை கொண்டுள்ளது. ஐநா சபை ஆப்கானிஸ்தான் மக்களுடனும், அந்நாட்டு அரசாங்கத்துடனும் ஒற்றுமையாக உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைமையிலான அரசு சமாதான முன்னெடுப்புகளை ஆதரிக்க வேண்டும். இல்லையெனில் நாடுகளுக்கிடையேயான மோதலுக்கு வழிவகுக்கக் கூடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் அடுத்த தலைவர்?