சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இதில், சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன. பார்வையாளர்களாக ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், நடப்பாண்டிற்கான மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்று வருகிறது. இதில், மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக, ரஷ்யா சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியா பல முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதைத்தொடர்ந்து, இந்தியா - கிர்கிஸ்தான் நாடுகளுடான தொழில்முனைவோர் மாநாடு நடைபெற்றது. இதில், கிர்கிஸ்தான் அதிபர் சூரான்பே ஜீன்பெகோ, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மோடி, "இந்திய பொருளாதாரத்தில் வளர்ச்சி, தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் ஆகியவையே உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு காரணம். மேலும், இந்தியாவின் இலக்கான ஐந்து டிரில்லியன் டாலரை அடைவதற்கு இளைஞர்கள் பெரும் பங்கு வகிப்பார்கள்" என்றார்.
இதனைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.