உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய ரேபிட் பரிசோதனை, பிசிஆர் பரிசோதனை, ஆண்டிஜென் ஆகிய முறைகள் கையாளப்பட்டுவந்தன. அந்த வகையில், நாய்கள் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் புதிய முயற்சியில் ஐக்கிய அரபு நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இதுதொடர்பாக அந்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "k9 போலீஸ் நாய்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் சோதனை முயற்சியில் வெற்றிபெற்றுள்ளன. இதைப் பயன்படுத்தி முக்கியத் தலங்கள், கூட்டமான பகுதிகள், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கரோனா நோயாளிகள் நுழையாமல் பாதுகாக்க முடியும்.
இந்த மாதிரி சோதனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அக்குள் பகுதியிலிருந்த மாதிரிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. கரோனா பாதிப்பாளர்களுடன் தொடர்புகொள்ளாமலேயே மாதிரிகளுடன் தொடர்புடையவர்களை நாய்கள் எளிதாகக் கண்டுபிடித்தன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி உள்துறை அமைச்சகம், காசநோய், மலேரியா போன்ற பிற தொற்று நோய்களைக் கண்டறிவதிலும் அதீத திறமை கொண்ட நாய்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். போலீஸ் நாய்களிடம் உள்ள வாசனை உணர்வு காரணமாகத்தான் ஷாப்பிங் மால், முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புக்குக் காவல் துறையினர் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.