பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான அல்-அஜிசியா உருக்காலை ஊழல் வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், 2018ஆம் ஆண்டு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து, அவர் காட் லக்பத் சிறையில் தண்டனை பெற்று வருகிறார். உடல்நிலை மோசமானதைச் சுட்டிக்காட்டி அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் பிணை பெறுவதற்கு அவரது தரப்பு தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
![மரியம், நவாஸ் ஷெரீப்,](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3785521_nawaz.jpg)
இதற்கிடையே, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் மகளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் துணைத் தலைவருவான மரியம், மறைமுக சக்திகளிடமிருந்து பெரியளவில் நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதன் காரணமாகவே தனது தந்தைக்கு தண்டனை வழங்கப்பட்டது என்று கூறினார். இது தொடர்பாக, தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் கூற்று உள்ள வீடியோ ஒன்றையும் மரியம் வெளியிட்டார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், வீடியோ வெளியான பிறகு தனது தந்தையைச் சிறையில் வைத்திருப்பது குற்றமாகும் என்றும், பிரதமர் இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என்றும் கடந்த 8ஆம் தேதி வலியுறுத்தினார்.
![மரியம், நவாஸ் ஷெரீப்,](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3785521_nawatttttt.jpg)
இந்நிலையில், மரியம் பேச்சை ஒளிபரப்பியதற்காக சேனல் 24, ஏபிபி டாக், கேபிடல் டிவி ஆகிய மூன்று தொலைக்காட்சிகளை அந்நாட்டு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் முடக்கி உத்தரவிட்டது. இதுகுறித்து மரியம் தனது ட்விட்டர் பக்கத்தில், "நம்பமுடியாத பாசிசம், அசிங்கம்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
![மரியம், நவாஸ் ஷெரீப்,](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3785521_mariyam.jpg)
பிரதமராக இம்ரான்கான் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைய இருக்கும் நிலையில், மரியம் மூலமாக புதிய அரசியல் நெருக்கடி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.