ஜப்பானில் சக்திவாய்ந்த வெப்பமண்டல புயல் ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இந்தப் புயலால் கனமழை, பலத்த காற்று வீசுகிறது. இந்தப் புயலுக்கு தாபா என பெயரிடப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பமண்டல புயல் இப்போது குறைந்த அழுத்தமாக மாறியுள்ளது. இந்தப் புயல் நாடு முழுவதும் பலத்த காற்று, கன மழையை ஏற்படுத்தும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலால் ஜப்பான் ஒகினாவா, நாகசாகி, மியாசாகி மாகாணங்களில் உள்ள ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
திங்களன்று வலிமையை இழந்த இந்தப் புயலானது தற்போது ஜப்பானின் மேற்கு கடற்கரையில் மணிக்கு சுமார் 65 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவருவதாகவும், இந்தப் பருவத்தில் இப்பகுதியில் 17ஆவது வெப்பமண்டல புயல் இதுவாகும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயலால் சுமார் 54 உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.