ஆப்கானிஸ்தானின் இரு பெரு நகரங்களான கந்தகார் மற்றும் ஹேரத் ஆகியவற்றை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கான் தலைநகர் காபூலுக்கு அடுத்து மிகப்பெரிய இரு நகரங்கள் இவையாகும். இதன்மூலம் அந்நாட்டில் உள்ள 34 பிராந்திய தலைநகரங்களில் 12-ஐ தலிபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தொடர்ந்து முன்னேறும் தலிபான்
முன்னதாக தலைநகர் காபூலில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள கஜினி என்ற நகரை நேற்று தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படையை விலக்க முடிவு செய்து அந்நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இதையடுத்து, அங்கு மீண்டும் தலிபான்களின் ஆதிக்கம் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து ஆப்கான் பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது.
இந்நிலையில், காபூலில் உள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் தூதரகங்களை பாதுகாக்க அமெரிக்கா சார்பில் 3,000 படையினரும், பிரிட்டன் சார்பில் 600 படையினரும் ஆப்கான் விரைந்துள்ளனர்.
நிலைமை மோசமடையும்பட்சத்தில் அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள், பிரிட்டானியர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ள இரு நாட்டு அரசும் திட்டமிட்டுள்ளன.
இதையும் படிங்க: உலக இடக்கையாளர்கள் தினம் - இடக்கைப் பிரபலங்களைத் தெரிந்து கொள்வோம்