ஆப்கானிஸ்தானின் குண்டுஸில் உள்ள இமாம் சாஹிப் மாவட்டத்தில் நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காவலர்கள், பொதுமக்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். எட்டு பேர் காயமடைந்தனர். இதனை மாகாண சபை உறுப்பினர் யூசுப் அயோபி தெரிவித்தார். பயங்கரவாதிகள் பலர் காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை ஆக்கிரமிக்க முயன்றதாகவும் அவர் கூறினார்.
இந்தத் தாக்குதல்கள் இன்று காலை வரை நீடித்ததாகவும், பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் பயங்கரவாதிகள் ஆறு பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதேபோல, அண்டை மாகாணமான படாக்ஷனில் உள்ள ஆர்கன்ஜ்வா மாவட்டத்தின் சோதனைச் சாவடியில், தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஏழு காவலர்கள் உயிரிழந்தனர், ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
தலிபானும் பாதுகாப்புப் படையினரும் இந்த இரண்டு மாகாணங்களில் பல ஆண்டுகளாக மோதலில் ஈடுபட்டுவருகின்றனர். எனினும், கடந்த பிப்ரவரி மாதத்தில் தலிபானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து, ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஷ்ரப் கானி உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் தலைவர்கள் வன்முறையைக் குறைக்க தலிபான்களுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர்.