கடந்த 2001ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க - தலிபான் இடையே கடும் போர் நடந்து வந்த நிலையில் அதனை முடிவிற்கு கொண்டுவர ஆப்கான் அரசு முனைந்தது.
இதனையடுத்து, அந்த நாட்டு அரசின் முன்னெடுப்பில் தலிபான்களுடன் அமெரிக்க அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. அதனடிப்படையில், கடந்த பிப்ரவரி 29ஆம் தேதியன்று இரு தரப்பினரும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்தது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றிப்பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், தோகா அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்திற்கு தலிபான் உறுதியளித்துள்ளது.
இது தொடர்பாக தலிபான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆட்சிக்கு வரும் புதிய அமெரிக்க நிர்வாகத்திற்கு தலிபான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
அத்துடன், ஆப்கானிஸ்தானில் அமைதியை திரும்பக்கொண்டுவர வேண்டி கையெழுத்திட்ட தோகா அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் தலிபான் இயக்கம் உறுதியாக இருப்பதையும் தெரியப்படுத்துகிறோம்.
தோகா அமைதி உடன்படிக்கையை அமல்படுத்துவதன் மூலமாக பல ஆண்டுகளாக தொடரும் அமைதியின்மைக்கு முடிவு கொண்டுவரலாம்.
ஆப்கானிஸ்தானில் தொடரும் நீண்ட போரை நிறுத்த சிறந்த ஆவணமான அந்த ஒப்பந்தம், அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மிகவும் நியாயம் சேர்க்கும்.
நாங்கள் எங்கள் தரப்பில் ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம். ஆப்கானிய பிரச்னையைத் தீர்ப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த அடிப்படை நடவடிக்கையாக அதனை நாங்கள் கருதுகிறோம். மேலும் எங்கள் உள் பிரச்னைகளை உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்ப்பதற்கும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.
தோகா அமைதி ஒப்பந்தத்தை ஜோ பைடன் மதிக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு நபருடன் தொடர்புடையதல்ல. மாறாக அமெரிக்க அரசுடன் செய்யப்பட்டது.
புதிய அமெரிக்க நிர்வாகம் ஆட்சிக்கு வரும்போது, அது இந்த ஒப்பந்தத்தை பின்பற்ற வேண்டும். புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தோகா அமைதி நெறிமுறைகளுக்கு கட்டுப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு மற்றும் தலிபான்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பேச்சுவார்த்தை குழுக்கள் 10க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியுள்ளன. ஆனால், இதுவரை நேரடி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.