ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் புறநகர்ப் பகுதியில், ஆப்கான் சிறப்புப் படைக்குச் சொந்தமான ராணுவத் தளம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இங்கு பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிலர் ராணுவத் தளத்துக்கு வெளியே பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதி ஒருவர், தன் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
சிறப்பு பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து, நடந்த இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில், பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் தாரீக் ஆரியன் கூறுகையில், "காபூல் அருகே சாஹார் அசையாப் பகுதியில் இத்தாக்குதலானது நடத்தப்பட்டது. தலிபான் பயங்கரவாதிகளே இதற்குக் காரணம். இது மனிதாபிமானத்துக்கு எதிரான செயல்" என்றார்.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் தளபதி அசாதுல்லா கலீத், ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க ராணுவத் தளபதி ஸ்காட் மில்லர் ஆகியோர் நேற்று தான் இந்த ராணுவத் தளத்துக்கு வந்து சென்றனர். இந்தச் சூழலில் தான், இந்தத் தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்கா மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், அமைதி ஒப்பந்தத்துக்குப் பிறகும், அந்நாட்டில் இதுபோன்ற வெடிகுண்டு சம்பவம் நடந்து வருவது, அந்நாட்டு மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : தலிபான்கள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் மூவர் உயிரிழப்பு!