ஆசிய-ஐரோப்பா கண்டங்களை இணைக்கும் நாடுகளாக துருக்கி-கிரீஸ் ஆகியவை உள்ளன. இந்த நாடுகளின் எல்லையில் உள்ள ஏஜியான் கடல் பகுதியில் 10.3 மைல் ஆழத்தை மையமாகக் கொண்டு இன்று (அக். 30) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோளில் இது 7.0ஆக பதிவாகியுள்ளது. இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக துருக்கியில் உள்ள இஸ்மிர் நகரில் 20-க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
முதற்கட்ட பாதிப்பு நிலவரம் மட்டுமே தற்போது வந்துள்ள நிலையில் அங்கு நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு, சுனாமி பாதிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் மூன்றாவது பெரிய நகரான இஸ்மிரில் 40-50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அதேபோல் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கிரீஸ் நாட்டிலும் உணரப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் குடியிருப்புகள் ஆட்டம் கண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க குடிமக்களுக்கு சிறப்பு சலுகை