இலங்கை நடப்பு நாடாளுமன்றத்துக்கான பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், முன்னதாகவே தோ்தலை நடத்தும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடா் மே 14-ஆம் தேதி நடைபெறுகிறது. கோத்தபய ராஜபக்ச கடந்த நவம்பரில் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டதால், தாம் சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை எனக் கூறினார்.
மேலும் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பெரும்பான்மையாக திகழ்ந்ததால் சில கட்டுப்பாடுகளை அவர் எதிர்கொண்டார். இந்த நிலையில் நாடாளுமன்ற கலைப்பு அறங்கேறியுள்ளது. வரும் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் மகிந்த ராஜபட்ச தலைமையிலான இலங்கை பொதுஜன முன்னணி வெற்றி பெறும் பட்சத்தில், ராஜபட்ச சகோதரா்களின் கை மேலும் ஓங்கும்.
கோத்தபய தற்போது சிறுபான்மை அரசாங்கத்தை நடத்திவருகிறார். அரசியலமைப்பில் எந்த மாற்றங்களையும் நிறைவேற்ற ராஜபக்சவுக்கு, மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இந்த நிலையில், நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டுள்ளது.
கோத்தபய ராஜபக்ச அதிபராக பதவியேற்ற சில நாள்களிலிலேயே, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். மேலும், முன்கூட்டியே தேர்தலுக்கும் ஏற்பாடு செய்துவிட்டார். நாடாளுமன்றத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் 1.62 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மகிந்த ராஜபக்ச இலங்கை அதிபராக இருமுறை பதவி வகித்துள்ளாா் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: அம்மாடியோவ்! திருமண செலவு ரூ. 500 கோடியாம்!