இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக் குறைவால் நேற்று (மே 26) காலமானார். அவருக்கு வயது 55. அவரது மறைவுக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக ஆறுமுகன் தொண்டமான் இருந்தார் என தனது இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர் எனவும் கூறினார்.
அதேபோல அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார். அதில், “ஆறுமுகன் தொண்டமான் திடீரென காலமான செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த தொண்டமானின் மறைவு இலங்கை மலையகத் தமிழர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் இலங்கை ஊவா மாகாண அமைச்சர், எனது அன்பு நண்பர் செந்தில் தொண்டமான் மற்றும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மலையகத் தமிழ் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.