கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. குறிப்பாக, தெற்காசிய நாடுகள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளன. இந்தியாவில் இதுவரை 18,601 பேரும் இலங்கையில் 304 பேரும் வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே கடந்த மார்ச் 2ஆம் தேதி நாடாளுமன்றத்தை அதிபர் கோத்தபய ராஜபக்ச கலைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருவதால், தேர்தல் ஜூன் 20ஆம் தேதி நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஒத்திவைப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அதிபருக்கு கடிதம் எழுதியது.
ஆனால், தேர்தல் நடத்துவது குறித்த முடிவை தேர்தல் ஆணையமே எடுக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் தலையீடு இருக்கக் கூடாது எனக் கோத்தபய ராஜபக்ச தெரிவித்தார்.
இதையும் படிங்க: வட கொரிய அதிபர் உயிர் ஊசலாடுகிறதா? - அமெரிக்கா பற்ற வைத்த நெருப்பு