கரோனா நோய்த் தொற்று தாக்குதல் காரணமாக உலக நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில், இலங்கை தலைநகர் கொழும்பில் மார்ச் 11 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, கொழும்பு, மாலிம்படா பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடி தர்சன குமார விஜேநாராயணா, பவானி ரசங்கா. இவர்கள் இருவரும் காதலித்து வந்தநிலையில், தங்களது திருமணத்தை பிரமாண்டமாக நடத்த பல மாதங்களாக திட்டமிட்டு திருமண ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆனால், கரோனா நோய்த் தொற்று காரணமாக மார்ச் 11ஆம் தேதி கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், இவர்களது திருமணத்தை ஏப்ரல் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்க பெற்றோரும், நண்பர்களும் அறிவுறுத்தினர். ஆனால், கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இதன் காரணமாக இந்த காதல் ஜோடி தங்களது திருமணத்தை எளிமையாக குடும்பத்தினர், நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பதிவு செய்துகொண்டனர். இதையடுத்து, தங்களது திருமணத்திற்காக ஆர்டர் செய்திருந்த உணவுப் பொருள்களை அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நிவாரணமாக வழங்க முடிவு செய்தனர்.
பின்னர், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த காதல் தம்பதி அரிசி,பருப்பு, சமையல், எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வழங்கினர். அதேபோல், குழந்தைகளுக்கு கேக், பொம்மைகளை வழங்கினர். இது குறித்து தர்சன குமார விஜேநாராயணா கூறுகையில்,
இதைச் செய்வதன் மூலம், எங்களுக்கு மிகுந்த திருப்தி கிடைத்தது. அவர்களின் முகத்தில், குறிப்பாக குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணும்போது. அந்த மகிழ்ச்சியை கூற எனக்கு வார்த்தைகள் இல்லை" என்றார்.
அப்போது, காதல் தம்பதி தகுந்த இடைவெளியை கடைப்பித்தும், முகக்கவசம் அணிந்தும் நிவாரணப் பொருள்களை வழங்கினர். இந்த காதல் தம்பதியின் இச்செயல் அனைவரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:மணமக்களுக்கு நாசிக் காவல்துறையின் சர்பிரைஸ் கிஃப்ட் "முபாரக் ஹோ தும்கோ"