இலங்கையில் கடந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது, நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில், இலவச விசா திட்டத்தை, இலங்கை அரசு ஆறு மாதம் காலத்துக்கு அறிமுகம் செய்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி அமலுக்கு வந்த இந்தத் திட்டம் இந்தியா, சீனா, இந்தோனேசியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட 48 நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டணம் எதுவும் வாங்காமல், விசா பெற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பீதியில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இந்தத் திட்டத்தை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து இலங்கை அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் ரமேஷ் பார்திரானா கூறுகையில், "ஈஸ்டர் குண்டுவெடுப்புக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இலவச விசா திட்டத்தால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10-12 விழுக்காடு வரை உயர்வு கண்டது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் சுற்றுலாத் துறை மீண்டும் பாதிப்படைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இலவச விசா திட்டத்தை மேலும் மீண்டும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க : கொரோனா வைரஸ் நடத்திய கொடூரத் தாக்குதல்! - சிறப்புக் கட்டுரை