உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பரவல் தென் கொரியாவில் தீவிரமடைந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாடு தழுவிய முழு ஊரடங்கு, பயணத் தடை, மக்கள் பொது வெளிகளில் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தென் கொரியா முடுக்கிவிட்டது.
இருப்பினும், இதனை பொருட்படுத்தாமல் சிலர் விதிமீறல்களில் ஈடுபட்டதால் நாட்டில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்ததாக அறிய முடிகிறது. குறிப்பாக, ஷிஞ்சியோன்ஜி தேவாலயத்தில் தடையை மீறி நடைபெற்ற வழிபாடுகளின் காரணமாக தென் கொரியாவில் ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்ததுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக தேவாலயத்தின் நிறுவனர் லீ மேன்-ஹீயின் (89) மீது சியோலுக்கு தெற்கே உள்ள சுவோனில் உள்ள ஒரு உள்ளூர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், மத சடங்குகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை கடந்து அதிகளவில் ஆட்களை இணைத்து வழிபாடு நடத்தியது சுகாதார அலுவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், தேவாலய நிதியில் இருந்து 4 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடி செய்ததாகவும், 2015-2019 ஆகிய நான்கு ஆண்டுகளில் அங்கீகரிக்கப்படாத மத நிகழ்வுகளை நடத்தியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜூலை 17 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அவரிடம் அரசு தரப்பு வழக்குரைஞர்கள் மேற்கொண்ட விசாரணையில் உறுதியானது. இதனடிப்படையில் அவரை நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டது.
தொற்று நோய் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியது, பொது அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் தென்கிழக்கு நகரமான டேகுவில் உள்ள ஷின்ஷியோஞ்சி சபையைச் சேர்ந்த சுமார் 4,000 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சபையைச் சார்ந்த 150க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்ததாகவும் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.