சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐ.எம்.டி.(I.M.D.) என்ற அமைப்பு உலக நாடுகளின் தொழிற்சார்ந்த சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்களை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம். அதன்படி 2019ஆம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
ஆய்வின் பின்னணி:
1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.எம்.டி. அமைப்பின் இயக்குநர் அர்துரோ பிரிஸ் தலைமையில் இந்த ஆய்வானது நடத்தப்பட்டது. பொருளாதார செயல்பாடு, உள்கட்டமைப்பு வசதி, அரசாங்கத்தின் திறன், தொழிற்திறன் ஆகிய நான்கு கூறுகளின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் 63 முன்னணி நாடுகளில் 235 அம்சங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆய்வு முடிவுகள்:
2019ஆம் ஆண்டு ஆய்வு முடிவுகளின் படி வல்லாதிக்க சக்தியான அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, மேம்பட்ட திறன்கொண்ட தொழிலாளர்கள், புதிய தொழில் தொடங்க சாதகமான சூழல் ஆகியவை சிங்கப்பூர் முதலிடம் பிடிக்க காரணமாகக் கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக ஹாங்காங் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றபின் மற்ற நாடுகளுடன் தொடுக்கும் வர்த்தகப் போரின் காரணமாகவே அமெரிக்கா பின்னடைவைச் சந்தித்துள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது. நான்காவது இடத்தை சுவிட்சர்லாந்து பிடித்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகள் முதன்முதலாக ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பிற நாடுகளின் நிலை:
கடந்த ஆண்டிலிருந்து ஒரு இடம் முன்னேற்றம் கண்ட இந்தியா தற்போது 43ஆவது இடத்தில் உள்ளது. ப்ரக்ஸிட் விவகாரம் தொடர்பாக குழப்பமான அரசியல் சூழலில் உள்ள பிரிட்டன் 23ஆவது இடத்தில் உள்ளது. ஜப்பான் 25ஆவது இடத்திலும், அண்மையில் பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த வெனிசுலா கடைசி இடத்திலும் உள்ளது.