உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸ், பல நாடுகளில் கோர தாண்டவம் ஆடியது. இதுவரை கரோனாவால் 42 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீன நாடு, மூன்று மாதப் போராட்டத்திற்குப் பிறகு, பழைய நிலைக்கு சிறிது சிறிதாக மாறி வருகிறது. கடைகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் தியேட்டர், பார் ஆகியவை மூடப்பட்டுதான் உள்ளது. இந்நிலையில், சுற்றுலா தளங்களில் மிகவும் பிரபலமான டிஸ்னி லேண்ட் மக்களின் பார்வைக்காக, சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஸ்னி லேண்ட் நிர்வாகம் கூறுகையில், "பார்வையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மக்கள் நடந்து செல்லும் போது தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். உடல் வெப்பத்தின் அளவும் டிஸ்னி லேண்ட் வாசலில் பரிசோதனை செய்யப்படும்.
மேலும், ஷாங்காய் டிஸ்னிக்கு வருபவர்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாளத்தைக் காண்பிக்க வேண்டும். ஷாங்காய் நகர அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஸ்மார்ட்போன் செயலி பயன்படுத்தயிருக்க வேண்டும்.
இதன் மூலம், அவர்களின் உடல்நலம் குறித்து கண்டறியவும், வைரஸால் பாதிக்கப்பட்ட எவருடனும் தொடர்பு உள்ளதா என்பதையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். கடந்த மூன்று மாத ஊரடங்கால், டிஸ்னி நிர்வாகத்துக்கு லாபத்தில் சுமார் 91 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கைத் தளர்த்தாதீர்கள்: எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!