உலகம் முழுவதும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு அதிகளவில் உள்ளது. அதே சமயம், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விகிதமும் கணிசமாக உயர்ந்துவருகிறது. இந்நிலையில், தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கும் மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்படுவதாக ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்துள்ளனர்
இது குறித்து நுண்ணுயிரியாளர் மருத்துவர் கெல்வின் கை-வாங் கூறுகையில், "33 வயதான நபர் ஒருவர் ஆகஸ்ட் பிற்பகுதியில் ஸ்பெயின் சென்றுவிட்டு ஹாங்காங் திரும்பிய சமயத்தில் அவரைச் சோதித்ததில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இது அவர் முதலாவதாக மார்ச் மாதத்தில் சந்தித்த தொற்று நோய் பாதிப்பைவிட மாறுபட்டதாக இருந்தது.
முதல்முறை அவருக்கு பல அறிகுறிகள் இருந்தன. ஆனால் இரண்டாவது முறை அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஏர்போர்ட் ஸ்கிரீனிங் சோதனையில் தான் கண்டறிந்தோம். நோய் எதிர்ப்பு சக்தியால் தொற்றிலிருந்து மீண்டிருந்தாலும் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பு சக்தி இருப்பது இல்லை.
எத்தனை பேர் மீண்டும் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை ஆனால் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது. இது தொடர்பான அறிக்கைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. சில மருத்துவ வல்லுநர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், தொற்றிலிருந்து மீண்டவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளி போன்றவை கடைப்பிடிக்கப்பட வேண்டும். தொற்று பாதிப்பு மீண்டும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மக்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்" என அறிவுறுத்தினார்.