கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பள்ளிகளைத் திறக்க முடியாததால், நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்களை ஆன்லைனில் நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன், "பள்ளிகள் திறப்பது குறித்து, உள்ளூரில் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பு தரவுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி வழிகாட்டுதல்களின் பேரில் பள்ளிகளைத் திறக்கலாம். தொற்றுப் பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகளைத் திறப்பது குறித்து யோசித்துக்கூட பார்க்க முடியாது. இச்சூழ்நிலையில் அபாயங்கள், நன்மைகள் இரண்டையும் மதிப்பீடு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது" எனத் தெரிவித்தார்.
நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து மத்திய அரசும் மாநில அரசுகளும் விவாதித்து வரும் சூழ்நிலையில், சுவாமிநாதனின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.