ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கூட்டுறவை வலுப்படுத்தும் நோக்கில், 2015ஆம் ஆண்டு முதல் கிழக்கு பொருளாதார மாநாடு (East Economic Forum) நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், ரஷ்யாவில் விலாடிவோஸ்டாக் நகரில் வரும் செப்.4 முதல் 6 ஆம் தேதி வரை, நடைபெறும் இந்த ஆண்டிற்கான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி முதன்மை அழைப்பாளாராக கலந்துகொள்கிறார்.
இதனிடையே, ரஷ்யா சக்தித் துறை அமைச்சர் அலெக்ஸாண்டர் நொவாக் அழைப்பை ஏற்று பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகஸ்ட் 29ஆம் தேதி, இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக ரஷ்யா சென்றிருந்தார்.
அந்தப் பயணத்தின் போது ரஷ்ய அரசுடனும், அந்நாட்டு எஃகு, சக்தி, எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் நாட்டின் எண்ணெய், எரிவாயு, பொறியியல் நிறுவனங்களைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவும் சென்றிருந்தனர்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், "கிழக்கு பொருளாதார மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவுள்ள நிலையில், அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பயணத்தில் சக்தி மற்றும் தாதுத் துறைகளில் ரஷ்யாவுடன் ஒத்துழைக்கும் இந்தியாவின் விரும்பம் வெளிப்படுத்தப்பட்டது" எனக் கூறப்பட்டுள்ளது.