சீனாவின் வூஹான் நகரில் தோன்றி தென் கொரியா, ஈரான், இத்தாலி, அமெரிக்க என சுமார் 60 நாடுகளில் கோவிட்-19 ( கொரோனா வைரஸ்) என்ற தொற்றுநோய் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 80 ஆயிரத்தும் மேற்பட்டோரைத் தாக்கியுள்ள இந்த நோயால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், பசிபிக் நாடான ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்ட 78 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
"ஜப்பானில் சிறைப்பிடிக்கப்பட்ட 'டைமண்ட் பிரின்சஸ்' சொகுசுக் கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த நபர், அங்கிருந்து மீட்கப்பட்டு பெர்த்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என்று ஆஸ்திலேய சுகாதாரத் துறை உயர் அலுவலர் ஒருவர் கூறினார்.
உயிரிழந்தவரின் மனைவிக்கும் வைரஸ் பாதிப்பு இருந்தாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் அவர் கூறினார். கோவிட்-19 வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் உயிரிழப்பு இதுவாகும்.
இதனிடையே, ஈரானிலிருந்து ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விளம்பரத்தால் கடுப்பான ஒபாமா!