உலகப் பெருந்தொற்றான கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து போராடிவரும் நிலையில், இந்தியா தனது பங்களிப்பாக பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசியை விநியோகம் செய்துவருகிறது. இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசியும், பாரத் பயோட்டெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன.
சர்வேச தடுப்பூசி கூட்டமைப்பு எனப்படும் கவி (Global Alliance for Vaccines and Immunisation - Gavi) செயல்திட்டத்தின் கீழ் இந்தியா பல்வேறு நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் தடுப்பூசிகளை இலவசமாக அளித்துவருகிறது. அதன்படி, பாகிஸ்தான் நாட்டிற்கு 1.6 கோடி தடுப்பூசிகளை இந்தியா வழங்கவுள்ளது.
மார்ச் மாத மத்தியில் முதற்கட்ட தடுப்பூசிகள் சென்றடையும் எனவும் மீதமுள்ள தடுப்பூசிகள் ஜூன் மாதத்திற்குள் சென்று சேரும் எனவும் கூறப்படுகிறது.
சீனா சார்பில் 'கான் சினோ' எனப்படும் தடுப்பூசி பாகிஸ்தானில் விநியோகத்தில் உள்ளது. இதுவரை, 18 ஆயிரம் பாகிஸ்தானியருக்கு சீனாவின் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சீனாவின் கரோனா தடுப்பூசியின் விலை ரூ. 2,000ஆக உள்ள நிலையில், இந்தியா சார்பில் அளிக்கப்படும் இலவச தடுப்பூசியை பாகிஸ்தான் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிறவெறிச் சர்ச்சையில் இங்கிலாந்து அரச குடும்பம்: மேகன் மெர்கல் கண்ணீர் பேட்டி