பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு முந்தைய அரசில் கடந்த 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கோயிலை கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், நில பகுதியில் முகாமிட்டு இஸ்லாமிய போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து கட்டமைப்பு ஒன்று நாட்டின் தலைநகரில் அமையக் கூடாது என்று முழக்கமிட்டனர். எனினும், பிரதமர் இம்ரான் கான் இந்த கோயில் அமைவதற்கு முக்கியத்துவம் அளித்தார். அதன்படி கிருஷ்ணர் கோயில் கட்டுவதற்கு அடிக்கலும் நாட்டப்பட்டது. பாகிஸ்தானில் மதநல்லிணகத்தையும் சகிப்பு தன்மையையும் உருவாக்க எழுப்பப்படும் இந்த கோயிலுக்கு பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த சூழலில், கிருஷ்ணர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயிலுக்கான நிதியை தங்களது வரி பணத்தில் இருந்து ஒதுக்குவதற்கு குடிமக்களும் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இந்த திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு ஊடக நிறுவனங்களும் வெளிப்படையாக பரப்புரை மேற்கொண்டன.
தொடர்ந்து அதிகரித்த அழுத்தத்தினால், அரசு அளித்த வாக்குறுதியான, கோயில் கட்டுமானத்திற்கான நன்கொடை தொகையை வழங்குவதில் இருந்து பின்வாங்கியது. இதனால், காலி நிலத்தில் கோயிலை சுற்றி எழுப்பிய சுவருடன் கட்டுமான பணியை அரசு நிறுத்தியது. இந்நிலையில், கோயில் கட்டுவது குறித்து இஸ்லாமிய அமைப்பின் ஆலோசனையை பாகிஸ்தான் அரசு நாடியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் மத விவகாரத் துறை அமைச்சர் நூருவல் ஹத் காத்ரி கூறுகையில், "கோயில் கட்டுவது தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை. உண்மையான நிலவரம் என்னவென்றால் மக்களின் பொது பணத்தில் கட்டப்படுமா? என்பதுதான்” என்றார். இந்த விவகாரம் தற்போது இஸ்லாமிய சித்தாந்த கவுன்சிலுக்கு (சிஐஐ) அனுப்பப்பட்டுள்ளது என்றும் இஸ்லாமிய பிரச்னைகள் குறித்தான ஆலோசனைகளை பாகிஸ்தான் அரசு இந்த அமைப்பிடம் கேட்கும் எனவும் காத்ரி தெரிவித்தார்.
இதையும் படிங்க...சீன தயாரிப்புகளுக்கு 49% இந்திய மக்கள் ஆதரவு!