இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர குற்றச்சாட்டை மேற்கொள்வது வழக்கமான ஒன்று. ஆனால் இம்முறை, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு வகையிலான ஆதாரங்களை சேகரித்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, "பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்திய புலனாய்வு அலுவலர்கள் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்ட இந்தியா உதவி வருகிறது.
சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் ஐநாவுக்கு அனுப்ப உள்ளோம். இந்த விவகாரத்தில், ஐநா இந்தியாவை கண்டிக்கும் என நம்புகிறோம். சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட முடியாது" என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் இந்தியா செயல்பட்டதற்கான ஆதாரங்களை பாதுகாப்பு படையின் ஊடக மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர் இப்திகார் வெளியிட்டார். புலனாய்வுத் துறை அலுவலர், பலுசிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ஆடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டார்.