பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு தொடர்பான (எஸ்.ஏ.பி.எம்) சிறப்பு உதவியாளர் பதவி வகித்துவந்தவர் லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) அசிம் சலீம் பஜ்வா. முன்னாள் தலைமை ராணுவ செய்தித் தொடர்பாளரான இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த ராஜினாமா முடிவு குறித்து அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "தகவல் மற்றும் ஒளிபரப்பு தொடர்பான (எஸ்.ஏ.பி.எம்) சிறப்பு உதவியாளர் பதவியிலிருந்து விலகினாலும், நாட்டின் வளர்ச்சிக்காக நடைபெற்றுவரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை (சிபிஇசி) ஆணையத்தின் தலைவராக தனது பணியைத் தொடர்வேன். சிபிஇசி மீது எனது கவனம் செலுத்த பிரதமர் என்னை அனுமதிப்பார் என்று நம்புகிறேன்.
என் மீதும் எனது குடும்பத்தினரின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கிறேன். எங்கள் நற்பெயருக்கு களங்களம் விளைவிக்கும் சதி இது. பாகிஸ்தானுக்கு பெருமை மற்றும் கண்ணியத்துடன் சேவை செய்வேன், எப்போதும் இருப்பேன். சிபிஇசி அதிகாரசபையில் தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதன் காரணமாகவே சிறப்பு உதவியாளர் பணியிலிருந்து விலக முடிவு செய்தேன்" என கூறினார்.
பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர் அஹ்மத் நூரானியின் புலனாய்வு செய்தி அறிக்கை, பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் மில்லியன் கணக்கான பஜ்வா மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர் என்றும் பஜ்வாவின் சகோதரர்கள், மனைவி மற்றும் இரண்டு மகன்கள் நான்கு நாடுகளில் 99 நிறுவனங்களை நடத்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார். அவற்றின் மதிப்பு 39.9 மில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.